Friday, March 24, 2017

Postal Savings Account: Rs.50 Minimum Balance and no charges for withdrawal

50 ரூ.மினிமம் பேலன்ஸ்! கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்... இதெல்லாம் எங்கே தெரியுமா? 

Posted Date: 19:58 (08/03/2017)

உண்மை... உண்மை... `50 ரூபாதான் மினிமம் பேலன்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்' என்ற அறிவிப்பை அஞ்சல் அலுவலகம் ஒன்றும் அதிரடியாக அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை பல நாட்களாகவே நீடித்து வருகிறது. ஆனால், நம்மில் பலருக்கும் இதைப் பற்றிய தகவல் தெரியவில்லை என்பதுதான் ஆச்சர்யம். 

வாட்ஸ் அப் வைரல்! 

வங்கிகளின் சேவை வரிகளால் சோர்வடைந்துள்ளீர்களா? எப்பொழுது எப்படி சேவை வரி பிடிப்பார்களோ எனக் குழப்பமடைகிறீர்களா? அஞ்சலகம் வாருங்கள்! கணக்கு துவக்குங்கள்! கட்டணமற்ற சேவைகளை அனுபவியுங்கள்... அஞ்சலகங்களில் SB கணக்கு தொடங்கி, ஏடிஎம் கார்டு பெற்று அனைத்து வங்கி ஏடிஎம்-களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ 50/- மட்டுமே. ஆவணங்கள் - 1) 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள். 2) ஆதார் அடையாள அட்டை நகல். அணுகவும்... அனைத்து அஞ்சலகங்கள்' என இரண்டு முக்கிய பிரச்னைகளால் இதுபோன்ற வாட்ஸ் அப் மெசெஜ்கள் வைரலாகி வருகின்றன.

பிரச்னை ஒன்று! 

சமீபத்தில் ஒரே மாதத்தில் 4 பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளன. அதன்பின் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் பணத்தை எடுப்பதற்கும் அடங்கும். ஒரு மாதத்தில் இந்த வங்கிக் கிளைகளில் நான்கு முறைக்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணம். இல்லையெனில் ஆயிரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரச்னை இரண்டு! 

வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிச் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 5,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்கத் தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என நம் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது. பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்சத் தொகையாக 5,000 ரூபாயும், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் 3,000 ரூபாயும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் 2,000 ரூபாயும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் 1,000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வைப்புத் தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. குறைந்த பட்ச இருப்புத் தொகையைவிட எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதன் அடிப்படையில் அபராதத் தொகை வசூலிக்கப்படும். உதாரணமாக, 50 முதல் 75 சதவிகிதம் வரை குறைவாக இருந்தால் அவர்களிடம் 75 ரூபாய் மற்றும் அத்துடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால் 50 ரூபாயுடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-ன் அறிவிப்பால் மாணவர்கள், இளைஞர்கள், ஓய்வூதியதாரர்கள், மாதச்சம்பளதாரர்கள் என 31 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், `50 ரூபாதான் மினிமம் பேலன்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்' என்ற அறிவிப்பு உண்மையா என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த அஞ்சல் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். 

”உண்மை... உண்மை... இது எப்படி என்றால் வங்கிகளுக்கு மட்டுமே பணப்பரிவர்த்தனைக்கான புரோகிராமிங் போடப்பட்டுள்ளது. இந்த அபராதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். ஆகையால், வங்கியால் வழங்கப்படும் கார்டுகளை எந்த ஏடிஎம் சென்டர்களில் பயன்படுத்தினாலும் சர்வர் மூலமாகக் கண்காணிக்கப்பட்டு பின்னர் பணம் பிடித்தம் செய்யப்படும். வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு, அஞ்சல் அலுவலக ஏடிஎம் சென்டரில் பணம் எடுத்தாலும் பணம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்படும் கார்டை, நீங்கள் எந்த வங்கி அல்லது ஏடிஎம் சென்டரில் பயன்படுத்தினாலும் அதற்கு அபராதம் இல்லை. எங்களுடைய அஞ்சல் அலுவலக சர்வர் மூலமாகவே பணம் வழங்குகிறோம். நாங்கள் வாடிக்கையாளரின் பணப் பரிவர்த்தனையைக் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை, வாடிக்கையாளரிடம் பணம் பிடிப்பதும் இல்லை. ஆகையால், வங்கிகளைவிட அஞ்சல் அலுவலகங்களில் கணக்கு துவங்குவது மிகப் பயனுள்ளதாக இருக்கும். அஞ்சல் அலுவலகத்தில் எந்த சர்வீஸ் சார்ஜ்-ம் கிடையாது. ஒரே மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். சாதாரண கணக்கு துவங்க 50 ரூபாய் மினிமம் பேலன்ஸ் இருந்தால் போதுமானது. இதற்கு ஏடிஎம் கார்டு வழங்கப்படும். காசோலைக் கணக்குக்கு 500 ரூபாய். அஞ்சல் அலுவலகத்தில் கணக்குத் துவங்க போட்டோ உடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று வழங்கினால் போதும்!” என்றார்.

அணுகவும்... அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம்!


Also read the related stories

அதிக வட்டி..அதிக வருமானம்... இந்த 8 அஞ்சலகத் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!

Posted Date : 12:24 (21/03/2017)

வங்கியில் பணம் போட்டால் குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி தருவார்கள். ஆனால், இப்போது நம்மிடமே பணம் பறிக்கிறார்கள். நம் பணத்தை அவர்களிடம் சுழற்சிக்குக் கொடுத்து நாம் அதற்கு கமிஷன் தர வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம். பெரும்பாலும் பொதுமக்கள் வங்கியையே சேமிப்புத் திட்டங்களில் முதலீடு மேற்கொள்ள நாடுகின்றனர். ஆனால், வங்கியைவிட அதிக வட்டி, அதிக லாபம் தரும் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. 

`செல்வ மகள் சேமிப்புக் கணக்கு, பொன் மகன் பொது வைப்பு நிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம்' எனக் குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை அஞ்சல் துறையில் பல சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன. 

1. செல்வ மகள் சேமிப்புக் கணக்கு! 

இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டம். 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்ச தொகையாக 1,000 ரூபாய் செலுத்தி அஞ்சலகங்களில் கணக்கைத் தொடங்கலாம். இந்திய அஞ்சலகத்தின் அனைத்துக் கிளைகளிலும் இத்திட்டத்தைத் தொடங்கலாம். ஒரு நிதி ஆண்டில் குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். ஆண்டுக்கு 8.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. 

2. பொன் மகன் பொது வைப்பு நிதி! 

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனைத்து வயதினருக்கும் பொதுவான ‘பொன்மகன் சேமிப்புத் திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. ஓர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்ச முதலீடாக 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். ஆண்டுக்கு 8 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. 

3. தொடர் வைப்புக் கணக்கு! 

மாதாந்திர சேமிப்புக்காக தொடர் வைப்புக் கணக்கு (Recurring Deposit (RD) Account) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.3 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. ஓர் ஆண்டுக்குக் குறைந்த பட்சம், அதிகபட்சம் என்று ஒன்றும் இல்லை, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சேமிக்கலாம். எந்த உச்ச வரம்பும் இல்லை. 

4. கால வைப்புக் கணக்கு! 

குறைந்த கால சேமிப்புக்காகக் கால வைப்புக் கணக்கு (Time Deposit (TD) Account) தொடங்கப்பட்டது. ஒரு ஆண்டுக்கு 7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதேநேரம் 2 வருடங்களுக்கு 7.1 சதவிகிதமும், 3 வருடங்களுக்கு 7.3 சதவிகிதமும், 5 வருடங்களுக்கு 7.8 சதவிகிதமும் வட்டி வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை, எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 

5. முதியோருக்கான சேமிப்புத் திட்டம்! 

அதிகபட்ச வட்டியுடன் வருமான வரிச் சலுகையும் (80C) பெற முதியோருக்கான சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme (SCSS) Account)தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 

6. மாதாந்திர வருமானத் திட்டம்! 

நிலையான மாத வருமானத்துக்கு மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme (MIS) Account) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 4.5 லட்சம் வரை முதலீடு மேற்கொள்ளலாம். 

7. தேசிய சேமிப்புப் பத்திரம்! 

வருமான வரிச் சலுகை (80C) பெறத் தேசிய சேமிப்புப் பத்திரம் (National Savings Certificates -NSC) திட்டம் தொடங்கப்பட்டது. ஐந்து வருடங்கள் வட்டி 8 சதவிகிதம் வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை. 

8. கிஸான் விகாஸ் பத்திரம்! 

112 மாதங்களில் பணம் இரட்டிப்பாக கிஸான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra - KVP) தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை. 

`அதிக வட்டி, அதிக லாபம்' தருகிறேன் என்று யார் சொன்னாலும், எந்த நிறுவனம் சொன்னாலும் நம்பாதீர்கள். அலசி ஆராய்ந்து அதன் பின்னே முதலீட்டினைத் தொடங்குங்கள். நம் ஊரில் வங்கிச் சேவை இல்லாத கிராமம்கூட இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் அஞ்சல் அலுவலகம் இல்லாத எந்த ஒரு கிராமமும் இல்லை. இன்றும் ஏதோ ஒரு மூலையில் தனது சிறகினை விரித்து சேவையை வழங்கி வருகிறது. வங்கிகளைப்போல பரிவர்த்தனைக் கட்டணம், மினிமம் பேலன்ஸ் என்று எந்த ஒரு நெருக்கடியும் அஞ்சல் சேமிப்புக் கணக்கில் இல்லை. 50 ரூபாய்தான் மினிமம் பேலன்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். அஞ்சல் சேமிப்புக் கணக்குபோல, குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சல் துறையில் இருக்கின்றன. நாளைய பாதுகாப்புக்கு இன்றே சேமிக்கத் தொடங்குங்கள். உங்களுடைய ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும். 


Also read the related stories

பணப் பரிவர்த்தனைக்கு ரூ.150 கட்டணம்... சாமான்யனை இம்சிக்கும் தனியார் வங்கிகள்!

Posted Date : 14:12 (02/03/2017)

‘ஒரு மாதத்தில் நான்கு பணப் பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்’ என்று ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் அறிவித்துள்ளன. இது சாமனியனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 

மார்ச் 1-ம் தேதியுடன்!

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி, தனது சேமிப்பு மற்றும் சம்பளக் கணக்கு வாடிக்கையாளர்கள் ‘இனி மாதம் நான்கு முறை மட்டுமே இலவசமாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்’ என்று அறிவித்துள்ளது. பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் பணத்தை எடுப்பது என எந்தவிதமான பரிவர்த்தனையாக இருந்தாலும், பணம் பிடித்தம் செய்யப்படும். ஒரு மாதத்தில் ஹெச்டிஎஃப்சி-யின் வங்கிக் கிளைகளில் நான்கு முறைக்கு மேல் பணம் டெபாசி‌ட் செய்வதற்கும், எடுப்பதற்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2017, மார்ச் 1-ம் தேதியுடன் ஆரம்பமாகிறது.

உதாரணத்துக்கு, ஒரு மாதத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர் அதன் வங்கிக் கிளைகளில் நான்கு முறை 2 லட்சம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். ஐந்தாவது முறையாக அதே மாதத்தில் வாடிக்கையாளர் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் இருந்து எடுக்கிறார் என்றால் 250 ரூபாய் பரிவர்த்தனைக் கட்டணமாக செலுத்த வேண்டியது வரும். பரிவர்த்தனைக் கட்டணம் ஆயிரத்துக்கு 5 ரூபாய் என்று வசூலிக்கப்படுகிறது. அதேசமயம் வாடிக்கையாளர் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் இருந்து எடுக்கிறார் என்றால் 100 ரூபாய்தான் கட்டணமாக வரும். ஆனால், குறைந்தபட்ச கட்டணமாக ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது. பரிவர்த்தனைக் கட்டணத்தைப் பொறுத்தவரை எது அதிகமாக இருக்கிறதோ அதுவே கட்டணமாக விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

25 ஆயிரத்துக்கு மேல் அனுமதி இல்லை!

ஹெச்டிஎஃப்சி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் அதன் கிளை தவிர, மற்ற வங்கிக் கிளைகளில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். ஆனால், 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்வது அல்லது எடுப்பதாக இருந்தால் ஆயிரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் அல்லது குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இதில் எந்தக் கட்டணம் அதிகமாக இருக்கிறதோ அந்தக் கட்டணமே வசூலிக்கப்படும் என்று ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. இந்தக் கட்டணம் வங்கிக் கிளைகளில் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே வசூலிக்கப்படும். ஏடிஎம்-களில் எடுக்கப்படும் பணத்திற்கு முன்பு இருந்த கட்டணங்களே பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கியில் மூன்றாம் நபர் பணப் பரிவர்த்தனைக்கு இனி மேல் 150 ரூபாய் கட்டணத்துடன் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும். 25 ஆயிரத்துக்கு மேலான பரிவர்த்தனைக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான கணக்குகளில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.

ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ்...

ஹெச்டிஎஃப்சி வங்கியைப் போல ‌ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கியும் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணங்களை விதித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் ஒவ்வொரு மாதமும் முதல் நா‌ன்கு பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. அதன் பிறகு ஆயிரம் ரூபாய்க்கு ரூ.5 என்ற விகிதத்தில் கட்டணம் விதிக்கப்படுகிறது. ‌இவ்வாறு வசூலிக்க‌ப்படும் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.150 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் மூன்றாம் நபர் பணப் பரிவர்த்தனைக்கு, நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற வங்கி கிளைகளில் முதல் முறை பணம் டெபாசிட் அல்லது பணம் பெறுவதற்கும் கட்டணம் விதிக்கப்படாது. ஆனால், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு ஆயிரத்துக்கு 5 ரூபாய் அல்லது குறைந்தபட்சம் ரூ.150 என கட்டணமாக விதிக்கப்படும். இதைப்போல ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்-களில் முதல் முறையாக இலவசமாக பணத்தை டெபாசிட் செய்யலாம். இரண்டாவது முறையிலிருந்து ஆயிரத்துக்கு 5 ரூபாய் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆக்சிஸ் வங்கியைப் பொறுத்தவரை அதன் வங்கிக் கிளைகளில் மாதம் ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய் வரை இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன்பின் பரிவர்த்தனைக்கு ஆயிரம் ரூபாய்க்கு ரூ.5 அல்லது குறைந்தபட்சம் ரூ.150 என்ற விகிதத்தில் கட்டண‌ம்‌ வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு பணமில்லாப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி பணமில்லாப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக பணப் பரிவர்த்தனைக்கு அதிரடியாக குறிப்பிட்ட கட்டணங்களை விதித்துள்ளது. ஆனால், இந்த அதிரடி சாமன்யனுக்கு `இடி'யாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. தனியார் வங்கிகளைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளும் இதேபோல் கட்டணம் வசூலிக்குமோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. 


Also read the related stories

மோடி... பணமதிப்பு நீக்கத்தால் நீங்கள் சாதித்தது இதுதானா!? 

Posted Date: 19:53 (16/02/2017)

`பண மதிப்பு நீக்கம் - இது ஒரு நல்ல திட்டம்; இந்த திட்டத்தால் நாட்டில் ஊழல் பெருமளவு குறையும்; ஊழல், பண பதுக்கல், கறுப்பு பணம், கள்ள நோட்டு போன்றவை இந்த நடவடிக்கையால் மிகமிகக் குறையும்’ எனப் பலரும் பாராட்டினர். ஆனால், இன்றுடன் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்து 100 நாள்கள் ஆகிவிட்டது. இந்த திட்டத்தால் நாட்டு மக்களுக்குக் கிடைத்த பயன் என்ன? பிரதமர் மோடி சாதித்தது என்ன?

மோடி... பணமதிப்பு நீக்கத்தால் நீங்கள் சாதித்தது இதுதானா!? 

முன்னுக்கு பின் முரண்!

பண மதிப்பு நீக்கத்தினையடுத்து ஓரிரு வாரங்கள் மட்டுமே எவ்வளவு பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது; எவ்வளவு பணம் புழக்கத்தில் விடப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனால், அதன்பின் எந்த ஓர் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ரிசர்வ் வங்கி மற்றும் அரசு தரப்பில் இருந்தும் பதில் இல்லை. நவம்பர் 28-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில், `நவம்பர் 27-ம் தேதி வரையிலான காலத்தில் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் சென்டர் மூலமாக 2.16 லட்சம் கோடி ரூபாய் பணம் விநியோகிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதில் 2000, 500, 100, 50 என எந்தெந்த ரூபாய் நோட்டுகளில் பணம் விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.

இதுகுறித்து டிசம்பர் 6-ல், மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித்துறையின் இணை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால், `நவம்பர் 29-ம் தேதி வரையிலான காலத்தில் 3.29 லட்சம் கோடி ரூபாய் பணம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில் 160.8 கோடிக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள், 15.6 கோடிக்கு, 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 176 கோடி நோட்டுகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 3.29 லட்சம் கோடி ரூபாய்’ என பதிலளித்தார்.  

நவம்பர் 9-ம் தேதியிலிருந்து 27-ம் தேதி வரையிலான காலத்தில் 2.16 லட்சம் கோடி ரூபாய் பணம் மட்டும் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவர்களின் கணக்கீட்டின் படி அடுத்த இரண்டு நாள்கள் அதாவது 28 மற்றும் 29-ம் தேதி 1.13 லட்சம் கோடி விநியோகிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற்ற நிதிக் கொள்கை கூட்டத்தில், ரிசர்வ் வங்கி துணை கவர்னர் காந்தி, `டிசம்பர் 6-ம் தேதி வரையிலான காலத்தில் 4 லட்சம் கோடி ரூபாய் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது’ என்றார். இதில் 1.06 லட்சம் கோடி ரூபாய் சிறிய ரூபாய் நோட்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மீதி 2.94 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள், பெரிய மதிப்பு கொண்ட 500, மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

ஆனால், நாடாளுமன்றத்தில் எழுத்து மூலமாக நிதித் துறையின் இணை அமைச்சர், `நவம்பர் 29-ம் தேதி வரையிலான காலத்தில் விநியோகம் செய்யப்பட்ட பணம் 3.29 லட்சம் கோடி ரூபாய்’ என தெரிவித்துள்ளார். இவையனைத்தும் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதற்குப்பின் டிசம்பர் 6-ம் தேதி வரை வரையிலான காலத்தில் 2.94 லட்சம் கோடி ரூபாய் பணம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்களைப் படிக்கும்போதே சற்று குழப்பம் வரலாம். தலை சுத்தலாம். ஆனால், இதில் எதுதான் உண்மை? ஏன் முன்னுக்கு பின்னான தகவல்கள் வெளியிடப்பட்டன என்பது தெரியவில்லை. 

100 நாட்கள்!

இப்போது பண மதிப்பு நீக்கம் அறிவிப்பு வெளியாகி 100 நாள்கள் கடந்து விட்டன. ஆனால், இன்றளவும் எவ்வளவு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. எவ்வளாவு பணம் புழக்கத்தில் விடப்பட்டது என்பது குறித்து ஒரு தகவலும் இல்லை. இதுகுறித்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான கெடு முடிவடைந்த பின்னும் சொல்லப்படவில்லை. பண மதிப்பு நீக்கம் பாதிப்பையடுத்து, ஆண்டு இறுதியில் நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றும் போதும் பிரதமர் மோடியும் விளக்கம் அளிக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டத்திலும் கவர்னர் அறிவிக்கவில்லை. பட்ஜெட்டுக்கு முன் மிக விரிவாகவும், புள்ளி விவரங்களோடும் தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கையிலும் எந்த ஒரு தகவலும் இல்லை. ஏன் 2017-18ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பிலும் கூட, பண மதிப்பு நீக்கத்தினையடுத்து, எவ்வளவு பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. எவ்வளவு பணம் புழக்கத்தில் விடப்பட்டது என்பது குறித்தும் எந்த ஓர் அறிவிப்பும் இதுவரை இல்லை.

மெளனம் கலைப்பீர்களா மோடி?

மத்திய அரசினைப் பொறுத்தவரை பண மதிப்பு நீக்க அறிவிப்பு, அரசு அறிவிக்கும் திட்டங்களைப்போல பத்தோடு பதினொன்றாக இருக்கலாம். ஆனால், இது சாமனியனுக்கு ஒரு திணிப்பாகவே இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தீர்கள். அதற்கு முன் யாருக்குமே, 'Demonetisation' எனும் வார்த்தையைப் பற்றி தெரியாது. இந்த வார்த்தையை அனைவரும் அறிய வைத்ததுதான் உங்கள் சாதனை. மற்றபடி, 100 என்ன 1000 நாள்கள் ஆனால் கூட, இதுகுறித்து அரசு மெளனம் கலைக்காது.


Disclaimer


This Blog Spot is meant for publishing news reports about the Stock Markets and its relateed affairs as we collected from the renowned Dailies, Magazines, etc., so as to create an awareness to the general public and also to keep it as a ready reckoner by them. As such the readers may extend their gratitude towards the Original Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy". Furthermore, the Blog Authors are no way responsible for the correctness of the materials published herein and the readers may verify the concerned valuable sources.